ஒரு சில உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் ஆதரவு தருவதற்கு பெரிய அளவில் உதவுகின்றன. அந்த வகையில் உங்களது டயட்டில் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் சேர்க்க வேண்டிய முக்கியமான சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
மெலிந்த புரதம் (லீன் ப்ரோட்டின்) :
கோழி, மீன், டோஃபு, பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் சார்ந்த பொருட்களில் அதிக அளவு புரோட்டின் உள்ளது. கார்போஹைட்ரேட் அல்லது கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது புரோட்டின் செரிமானம் ஆவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இது தற்காலிகமாக வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
முழு தானியங்கள் :
பழுப்பு அரிசி, கினோவா, பார்லி, முழு கோதுமை போன்ற முழு தானியங்களை உங்களது உணவில் சேர்த்து வாருங்கள். ஏனெனில் முழு தானியங்களில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் அது செரிமானத்தை அதிகப்படுத்தி, நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு தருகிறது. இதனால் நீங்கள் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. இதன் விளைவாக உடல் எடை கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.
காரசாரமான உணவுகள் :
குடைமிளகாய், மிளகு, இஞ்சி போன்ற மசாலா பொருட்களில் கேப்சைசின் மற்றும் ஜிஞ்சரால் போன்ற ஒரு சில காம்பவுண்டுகள் காணப்படுகிறது. இந்த காம்பவுண்ட்ஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பு எரிக்கும் செயல்முறையை மேம்படுத்துகின்றன.
கிரீன் டீ :
கிரீன் டீயில் கேட்டசின்கள் என்று சொல்லப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஏராளமாக உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பு ஆக்சிடேஷனை அதிகரிக்கிறது. வழக்கமான முறையில் நீங்கள் கிரீன் டீயை சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ குடித்து வரும்போது நாளடைவில் உங்கள் உடல் எடை குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.
காபி :
காபியில் உள்ள காஃபைன் தற்காலிகமாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் இயற்கை தூண்டுதலாக அமைகிறது. மேலும் கொழுப்பு எரித்தல் மேம்படுத்தப்படுகிறது.
இந்த உணவுகளை உங்களது சரிவிகித உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வர வேண்டும். அதோடு வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை, குளிர் பானங்களை தவிர்ப்பது, மது மற்றும் புகைப்பிடித்தலை கைவிடுவது போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலமாக உடல் எடையை விரைவில் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.