அமெரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு தற்போது நிலவி வருகின்றது.
குறிப்பாக நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் உருவாகியுள்ள பனிப்புயல் தற்போது வலுப்பெற்றதன் காரணமாக முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பகுதியில் வெப்பநிலை -30 டிகிரியை கடந்துள்ளதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வீதிகளிலும், ரெயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைகுவியல் போல் குவிந்ததால் வீதிகள் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு இடங்களில் வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பென்சில்வேனியா மாகாணத்தில் ஏற்பட்ட பனிபுயல் காரணமாக 2 லட்சத்திற்கு அதிகமானோரின் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.