டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவசாயிகளின் போராட்டமானது தொடர்ந்து 3 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை இரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பஞ்சாப்-ஹரியாணாவின் ஷம்பு எல்லையில் நேற்றைய தினம் ஒன்று திரண்ட விவசாயிகள் டெல்லி சலோ என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லி நகரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றதாகவும் இதில் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டமானது டெல்லி மாத்திரமன்றி அண்டைய மாநிலங்களிலும் பெரும் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மாலை 5 மணியளவில் மத்திய அரசு, விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.