திரையரங்கில் டிக்கெட் கட்டணம் குறைகிறது..வெளியான முக்கிய தகவல்..

by Editor News

திரையரங்கில் கூட்டம் குறைந்து வருவதையடுத்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

திரையரங்கில் குறையும் கூட்டம் :

தமிழகத்தில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் திரையங்கிற்கு வரும் நிலையில், பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு மட்டுமே திரையரங்கம் கிடைப்பதாகவும், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கம் கிடைக்கவில்லையெனவும் புகார் கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஓடிடி வரவு காரணமாக திரையரங்கில் வரும் கூட்டமும் பெரிதும் குறைத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து திரையரங்கிற்கு அதிகளவு மக்களை ஈர்க்கும் வகையில் திரையரங்கு கட்டணத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் சங்கம் திரையரங்கு உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எழுதியுள்ள கடிததத்தில், கடந்த நவம்பர் 2023 முதல், திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து வருவது குறித்து தங்களின் குரல் பதிவை கேட்டோம். இந்த விஷயம் தயாரிப்பாளர்களையும் மிகவும் பாதித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

கட்டணத்தை குறைக்க திட்டம் :

குறிப்பாக சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை பெரும்பாலான பார்வையாளர்கள் திரையரங்குகளில் பார்த்து நல்ல வசூல் தரும் போக்கு குறைந்து வருவது அனைவருக்கும் கவலை தருகிறது. விதிவிலக்காக சில சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களுக்கு மட்டும் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. ஆனால் அவ்வாறு எப்போதாவது வரும் வெற்றி, நம் இரு தரப்பினருக்கும் போதாது. சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைப்பது நம் இருவரின் பொறுப்பு. இதை மனதில் வைத்து நாம் இரு சங்கங்களும் சேர்ந்து சில மாற்றங்களை கொண்டு வரவேண்டியது அவசியமாக உள்ளது.

ரீ ரிலிஸ் திரைப்படங்களுக்கு வரவேற்பு :

நல்ல திரைப்படங்களை, சரியான விளம்பரங்களுடன் கொடுப்பது தயாரிப்பாளர்களின் பொறுப்பு என்றால், திரையரங்கில் அத்தகைய படங்களை பார்ப்பது அதிகம் செலவாகிற விஷயம் என்று மக்களிடம் உள்ள பொதுவான ஒரு எண்ணத்தை உடைப்பது திரையரங்கு உரிமையாளர்களின் பொறுப்பு. சென்னையில் ரீ-ரிலீஸ் என்ற முறையில் சில முக்கிய படங்களை திரையரங்கில், குறைந்த டிக்கெட் கட்டணத்தில் வெளியிட்டு கமலா திரையரங்கம் நல்ல சாதனைகளை புரிந்துள்ளது. குறைந்த டிக்கெட் கட்டணங்கள் பார்வையாளர்களை கவருகின்றன என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பிப்ரவரி 23 முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு :

இதை முன்னதாரணமாக வைத்து சிறு பட்ஜெட் படங்களை பொதுமக்கள் திரையரங்கு வந்து பார்ப்பதை இலகுவாக்க, கீழ்கண்ட மாற்றி அமைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்களை பிப்ரவரி 23 முதல் வெளியாகும் படங்களுக்கு தாங்கள் வசூலிக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்த ஒரு மாற்றம், மக்கள் மத்தியில் மீண்டும் திரையரங்கு வந்து சிறு பட்ஜெட் படங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் :

அதன் படிசிறுபட்ஜெட் படங்கள் 5 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 150 திரையரங்குளில் வெளியாகும் படங்களுக்கு சென்னை, சேலம், திருச்சி, மதுரை, மற்றும் சேலம் நகரங்களில் அதிகபட்சமாக 100 ரூபாயும், மீதி அனைத்து நகரங்களிலும் அதிகபட்சமாக 80 ரூபாய் வசூலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் 5 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு சென்னை, சேலம், திருச்சி, மதுரை, மற்றும் சேலம் நகரங்களில் அதிகபட்சமாக 150 ரூபாயும், மீதி அனைத்து நகரங்களிலும் அதிகபட்சமாக 120 ரூபாய் வசூலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment