91
ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)
சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவஞ் சத்தியாகுஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைச்
சத்தி தானென்றுஞ் சமைந்துரு வாகுமே.
விளக்கம்:
இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள். இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள், இறைவனாவன் இறைவியாகவும் இருக்கின்றான். இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள் வேறு எதுவும் இல்லை. இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள். இதை பரிபூரணமாக உணர்ந்து கொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும்.