அமெரிக்க செனட் சபையினால் நடத்தப்பட்ட விசாரணையின் போது மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) பகிரங்கமாக பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசென்ஜர் உள்ளிட்ட சமூக ஊடகங்களினால் தமது பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க செனட் சபை அண்மையில் விசாரணைகளை முன்னெடுத்தது.
இதன்போது குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிடம் ”உங்கள் வலைதள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?” என கேட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக”நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது. என்னை மன்னியுங்கள்” என மார்க் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். குறித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை இவ்விசாரணையின் போது டிக்டொக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் சமூகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.