தேவையான பொருட்கள் :
வாழைப்பூ – 1
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3 to 4
காய்ந்த சிகப்பு மிளகாய் – 3 to 4
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
அரைத்த தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் தேவையான அளவு கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு காய்ந்த சிகப்பு மிளகாயுடன் சேர்த்து ஊறவைத்து கொள்ளுங்கள்.
பிறகு வாழைப்பூவில் உள்ள நரம்பை எடுத்து அதை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
நறுக்கிய வாழைப்பூவில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், 1/3 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
அடுத்து ஏற்கனவே உறவைத்துள்ள கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் ஒரு காய்ந்த சிகப்பு மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து அதனுடன் சிறுதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவும்.
தற்போது அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதன் தட்டில் வாழை இலையை போட்டு ஒரு தட்டில் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையையும், மற்றொரு தட்டில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவையும் வைத்து 10 நிமிடங்களுக்கு நன்றாக அவித்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்துக்கொள்ளுங்கள்.
கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், விதை எடுத்த காய்ந்த சிகப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின்னர் கொஞ்சம் கொரகொரவென்று அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வதக்கிக்கொள்ளுங்கள்.
இந்த கலவை சிறிது கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அவித்து வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து பொறுமையாக கலந்து விட்டுக்கொள்ளவும்.
அடுத்து அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்றாக கிளறி கடைசியாக பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிபோட்டு சமைக்கவும்.
பிறகு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸ் செய்தால் சுவையான ‘வாழைப்பூ புட்டு’ தயார்…