ஓபிஎஸ் உடன் கூட்டணி வைப்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், மற்ற கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜக தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்து உள்ள நிலையில், ஓபிஎஸ் உடனான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பாட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
திருவள்ளுவர் விவகாரத்தில் ஆளுநரின் செயல் அந்த பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்றும் இதுபோன்று நடவடிக்கைகள் ஆளுநர் செய்வது தவறு என்றும் அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.