மெரி கிறிஸ்துமஸ் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என அறிவித்து உள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். இந்தியில் அவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இப்படம் வருகிற ஜனவரி 12-ந் தேதி பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ள விஜய் சேதுபதி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் இனி வில்லன் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது : “கெஸ்ட் ரோலில் நடிக்க சொல்லி அணுகுபவர்கள் எண்ணிக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நான் நடிக்க மறுத்த கெஸ்ட் ரோலே 10, 20க்கு மேல இருக்கும். ஒருகட்டத்துக்கு மேல நிப்பாட்டிட்டேன். முன்னர் அதன்மீது வேறு ஒரு பார்வை இருந்தது.
நாம் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ நடித்துக் கொடுப்பதனால் ஒருபடத்துக்கு சப்போர்ட்டாக இருக்கிறதே என எண்ணி நடித்துக் கொடுத்து வந்தேன். அது அதிகமாகும் போது, எதுவானாலும் இவரை கெஸ்ட் ரோலில் நடிக்க அழைக்கலாம் என நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். அதற்கு இப்போதான் ஸ்ட்ரிக்டா நோ சொல்லிவிட்டேன். அதுவே நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தையும் பாதித்தது. அதனால் தான் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டாம் என நிறுத்திவிட்டேன்.
அதேபோல் வில்லனாக நடிக்கவும் நிறைய பேர் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். வரும் கதைகள் எல்லாம் வில்லனாக சித்தரிப்பது போலவே வந்தன. அதனால் நோ சொல்ல ஆரம்பித்தேன். சிலர் நோ சொன்னாலும் நீங்க கதையை கேட்டுட்டு சொல்லுங்கனு சொல்றாங்க. அவை எல்லாத்துக்கும் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் கோவா சர்வதேச திரைப்படம் விழாவுக்கு சென்றபோது வில்லனாக நடிப்பதை நிறுத்திட்டேன்னு சொன்னேன்” என விஜய் சேதுபதி கூறி உள்ளார்.