திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் – 23

by Editor News

திருப்பாவை பாசுரம் – 23

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன் கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய சீரிய சிங்கா தனத்திருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

விளக்கம் : மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் தீப்பொறி பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வரும். அதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக. காயாம்பூ போன்ற நிறமுடைய மணிவண்ணா. நீ உன்னுடைய கோவிலில் இருந்து இங்கு வா. அழகிய அரியணையில் வந்து அமர்ந்து எங்களின் குறைகளை கேட்டு அருள்புரிவாயாக என்று வேண்டுகிறாள் ஆண்டாள். ‘அங்கண் மாஞாலத்தரசர்’ பாசுரத்தில், ஆண்டாள் இதர பாகவத பெண்பிள்ளைகளோடு, பிராட்டியை முன் வைத்து, பகவானை நெருங்கி உன் சிவந்த கண்களை சிறிது சிறிதாக திறந்து எங்கள் மேல் உன் கடாக்ஷத்தை – கடைக்கண் பார்வையை செலுத்த வேண்டும் என்று கேட்க, பகவான் எழுந்திருக்கிறான். இந்த பாசுரத்தில் கண்ணன் எழுந்திருக்கும் அழகை, தன் துணையோடு குகையிலே படுத்திருக்கும் சிங்கம் எழுந்து வருவதை உபமானமாகச் சொல்லி ரசிக்கிறார்கள். நாங்கள் இதற்கு முன்னமே எழுந்திருந்து பலகாலும் உன் பேர்பாடி, ஒவ்வொரு பாகவதர்களாக எழுப்பி, உன் வாயில் காப்போர்களை அண்டி அனுமதி பெற்று, நந்த கோபர், யசோதை ஆகியோர்களை எழுப்பி, உன் பிராட்டியை எழுப்பி நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வந்து சேர்ந்திருக்கிறோம். இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை அடைந்திருக்கிறோம். ஆகையால் இப்படி நாங்கள் வந்ததை நீ ஆராய்ந்து, அறிவுற்று பார்த்தால், அருளுவாய் என்று சொல்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

திருப்பள்ளியெழுச்சி – 3

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகைகளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

விளக்கம்:

திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. தேவனே, திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, யாராலும் அறிய முடியாத அரும்பொருளே, எளியவனே, இறையடியார்கள் சங்குகளை முழங்குகின்றனர். தேவனே, திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, யாராலும் அறிய முடியாத அரும்பொருளே, எளியவனே, இறையடியார்கள் சங்குகளை முழங்குகின்றனர். நட்சத்திரத்தின் ஒளி மறைந்து போய் விட்டது. சூரியனின் ஒளி எழுந்து விட்டது. எங்களுக்கு கருணை காட்டி, வீரக்கழல் செறிந்த உனது திருவடிகளை எங்களுக்குக் காட்டி அருள் புரிவாயாக.

Related Posts

Leave a Comment