திருமணம் செய்வதற்கு சரியான இடத்தை தேர்வு செய்வதை விட அல்லது திருமணத்திற்கான உடைகளை தேர்வு செய்வதை விட, திருமணம் முடிந்த பிறகு தேனிலவு (ஹனிமூன்) எங்கு செல்லலாம் என தேர்வு செய்வதுதான் பல தம்பதிகளுக்கு கடினமான காரியமாக இருக்கிறது. திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் தனியாக நேரத்தை செலவழிப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் தேனிலவு சரியானதாக இருக்கிறது.
தேனிலவு செல்லக்கூடிய நாட்களை வாழ்நாளில் என்றுமே மறக்கமுடியாத அளவிற்கு இருக்க வேண்டுமென்றால், தம்பதிகள் இருவருக்கும் பிடித்தமான இடத்திற்கு செல்ல வேண்டும். உலகம் முழுவதும் தேனிலவு செல்வதற்கு பல ஊர்கள் இருந்தாலும் உங்களுக்கு பொறுத்தமான சிறந்த இடங்களை நாங்கள் தேர்வு செய்து தருகிறோம். தேனிலவு செல்லும் யோசனை இருந்தால் இந்த இடங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சண்டோரினி, க்ரீஸ் :
மலை முகடுகளில் இருக்கும் வெள்ளை நிற கட்டிடங்கள் நிச்சயம் உங்கள் கண்ணைக் கவரும். இங்கிருந்து ஏஜியன் கடலை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். புதிதாக திருமணம் செய்தவர்கள் தேனிலவு செல்வதற்கு சிறந்த இடமாக சண்டோரினி இருக்கிறது. இங்கு சூரியன் மறையும் காட்சியைப் பார்ப்பது மிகவும் பிரபலமாகும். கடற்கரை ஓரத்தில் அமர்ந்து கணவனும் மனைவியும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். மேலும் இங்குள்ள பல பாரம்பரிய க்ரீஸ் நாட்டு உணவுகளையும் ருசிக்கலாம்.
போரா போரா, பிரெஞ்சு பாலிநேசியா :
தெற்கு பசிபிக் கடலின் மணி மகுடமாக இருக்கிறது போரா போரா. இங்குள்ள மிதக்கும் மாளிகைகள், தெள்ளத் தெளிவான தண்ணீர் தடாகம், பச்சை பசேலான இயற்கை காட்சிகள் என தேனிலவு கொண்டாடுவதற்கு சிறந்த இடமாக இது இருக்கிறது. இங்கு பீச்கள் மிகவும் பிரசித்தம். அதுதவிர நிறைய நீர் விளையாட்டுகளை விளையாடலாம். பவளப் பாறை தோட்டங்களும் கடல்வாழ் உயிரினங்களும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
கியாடோ, ஜப்பான் :
வரலாற்று சிறப்புமிக்கதாகவும் அமைதியான நகரமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் தாராளமாக ஜப்பானில் உள்ள கியாடோ நகருக்கு தேனிலவு செல்லலாம். இந்நகரத்தில் உள்ள பழங்கால கோயில்கள், பாரம்பரிய தேநீர் விடுதிகள் கணவன் மனைவிக்கு இடையே கூடுதல் நெருக்கத்தை உருவாக்கும்.
குயின்ஸ்டவுன், நியூசிலாந்து :
ஆல்ப்ஸ் மலைகள் பின்னணியில் வாகடிபு ஏரி கரையோரம் இருக்கும் அழகான நகரமே குயின்ஸ்டவுன். புதுமண தம்பதிகளின் சொர்க்கபுரி என்றே இந்நகரத்தைக் கூறலாம். ஏரியில் படகு சவாரியில் ஈடுபடலாம் அல்லது தம்பதிகள் இருவரும் ஒன்றாக மலையேறலாம் அல்லது பங்கி ஜம்பிங் செய்யலாம். இப்பகுதியில் கிடைக்கும் உள்ளூர் வைன் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதையும் ருசித்துப் பாருங்கள்.
வெனிஸ், இத்தாலி :
கால்வாய்களின் நகரம் என அழைக்கப்படும் வெனிஸ், இன்றும் பழைய பெருமையை இழந்துவிடாமல் தேனிலவு கொண்டாடுபவர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கிருக்கும் அழகான கட்டிடங்களும், சிக்கலான தெருக்களும் உங்களை ஆச்சர்யமூட்டும். கால்வாய் ஓரமாக இருக்கும் உணவகத்தில் கணவனும், மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டே இத்தாலிய உணவு வகைகளை ருசித்து சாப்பிடலாம்.
மாலத்தீவு :
இந்திய பெருங்கடலில் உள்ள பல பவளப் பாறை தீவுகளின் கூட்டமே மாலத்தீவுகள். உங்கள் தேனிலவை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என விரும்புகிறவர்களின் முதல் தேர்வாக மாலத்தீவுகள் இருக்கிறது. கடல்நீரில் மிதக்கும் வீடுகள், தெள்ளத்தெளிவாக கடற்கரை, பவளப் பாறைகள், பிரத்யேகமான இரவு விருந்து என நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் மாலத்தீவில் கிடைக்கும். தனிமையை, அமைதியை விரும்பும் தம்பதிகளுக்கு மாலத்தீவு சிறந்த இடமாக இருக்கும்.