திருப்பாவை -18
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
விளக்கம்:
இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. மதங்கொண்ட யானையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான ஸ்ரீ நந்தகோபரின் மருமகளே! நறுமணம் வீசும் கேச பாசத்தை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியே! கதவைத்திற. உதயமாவதற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன, வந்துபார். மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! கண்ணனின் பெயரைப் பாடுவோம். கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க, எங்களுக்காக எழுந்துவந்து கதவைத் திறந்து உதவ வேண்டும் என்கிறார்கள். பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான் முதலில் சேவிக்க வேண்டும். அதனால்தான், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
திருவெம்பாவை – 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம் :
அனைத்துத் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று அவனுடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிகுந்த மணிக்கற்களால் இழைக்கப்பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம் முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்பொழுது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அதே சமயத்தில் சிவபெருமான் திருவடிகளும் ஒளியை வீசுகின்றன. இவைகளில் எந்த ஒளி பேரொளி என்பதை இங்கே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.
தோழியர்களே! பொழுது புலர்ந்துவிட்டது. கதிரவன் தோன்றிவிடப் போகின்றான்; விண்மீன்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லுமிடத்தில் எப்படி மறைகின்றன என்றால், அண்ணாமலைப் பெருமான் அடிக்கமலத்துட் சென்று வணங்குகின்ற தேவர்களது முடிமணியின் ஒளிகள் எப்படி மறைகின்றனவோ அதுபோல் மறைகின்றன என்று சொல்லி, பெண்ணாகியும், ஆணாகியும், அர்த்தநாரீஸ்வருமாக விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இந்த புது புனலில் நீராடுவீராக என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர்.