சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காதல் விவகாரம் காரணமாக நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி அருகேயுள்ள சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த வேணுகோபால். தினசரி கூலி தொழிலாளியான இவர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதற்கிடையே வேலைக்கு சென்ற மகன் வீடு திரும்புவான் என வேணுகோபாலின் தாயார் குணா நினைத்துக் கொண்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தேவூர் காவல் நிலையத்திற்கு வந்த சடையம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆபரகான் என்ற இளைஞர் தானும் தனது நண்பர்களும் குடிபோதையில் கூழிதொழிலாளி வேணுகோபாலை கல்லால் தாக்கி கொலை செய்து புள்ளா கவுண்டம்பட்டி அக்ரஹாரம் மேல் வளவு பகுதி கிழக்குக்கரை கால்வாயில் வீசி விட்டதாக தேவூர் காவல் நிலையத்தில் சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவூர் போலீசார் உடனடியாக சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் தேவிக்கு தகவல் அளித்து அவரது தலைமையில் புள்ளா கவுண்டம்பட்டி பகுதி கிழக்குக்கரை கால்வாயில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்த வேணுகோபாலின் சடலத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தேவூர் போலீசார் ஆபரகானிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது வேணுகோபாலும் தானும் நண்பர்கள் என்றும் அவர் தனது நண்பர் சகோதரியை காதலிப்பதாக தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் அவரைக் கண்டிக்க அழைத்துச் சென்ற பொழுது குடிபோதையில் எதிர்பாராத விதமாக கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.
பின்னர் குடிபோதையில் தனது தாயை தகாத வார்த்தையில் பேசியதாகவும் அதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக தொடர்ந்து பதில் அளித்து வருகிறார். தொடர்ந்து போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த மற்ற இருவரையும் கைது செய்தால் மட்டும் தான் கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என கூறுகின்றனர்.