அவியல் செய்வதற்கு கேரட், பீன்ஸ், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
காய்கறி கலவை – 2 கப்
தேங்காய் துருவல் – ½ கப்
சீரகம் – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் 2-3
தயிர் – ¼ கப்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு -½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் நறுக்கிய காய்கறிகளுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
7-10 நிமிடங்களில் காய் நன்கு வெந்துவிடும். காய்கறிகளை வேக வைக்க சரியான அளவு தண்ணீரை பயன்படுத்தவும். அதிகமாக சேர்க்க வேண்டாம்.
ஒரு சில காய்கறிகள் வேக சிறிது நேரம் அதிகமாக தேவைப்படும். இது போன்ற காய்கறிகளை முதலில் சேர்த்து, பின்பு எளிதாக வேகக் கூடிய காய்கறிகளை சிறிது நேரம் கழித்து சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் காய்கள் எல்லாம் குழையாமல் நன்கு வெந்து கிடைக்கும்.
அடுத்ததாக ஒரு மிக்ஸர் ஜாரில் தேங்காய் துருவல், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வெந்த காய்கறியுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும்.
அடுப்பை அணைத்த பின் அடித்து வைத்துள்ள தயிர் சேர்த்த நன்கு கலக்கவும்.
அவியலை தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேங்காய் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளித்து அவியலுடன் சேர்த்து கலக்கவும்.