ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலமாக இருப்பதால் திமுகவினர் தங்களது வழக்கமான பாணியில் மஞ்சப்பை வசூலில் இறங்கிவிடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கும், கோவிலில் பணியாற்றுகின்ற தற்காலிக காவல் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக தாக்கப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் கொண்ட ஆலயமாகவும் திகழ்வது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிற ஒரு சிறப்பு வாய்ந்த தலமாகவும் இது விளங்குகிறது.
மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியன்று ‘வைகுண்ட ஏகாதசி’ விழாவாக 21 நாட்கள் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வர தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் கோவில் மூலஸ்தானம் அருகே உள்ள காயத்திரி மண்டபத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த போது, கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டதாகவும், அச்சமயம் அவர்களை வெகுநேரம் காக்க வைத்து முக்கியஸ்தர்களை மட்டும் அனுமதித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை கண்ட ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்கள் அங்கு இருந்த கோவில் தற்காலிக பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமயத்தில் கைகலப்பு ஏற்பட்டு கோவில் தற்காலிக காவல் பணியாளர்கள், ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களை கடுமையாக தாக்கியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக கோவில் மூலஸ்தானத்திற்குள்ளேயே இது போன்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எங்கு பார்த்தாலும் வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. தற்போது இந்து சமய அறநிலையைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற கோவில் மூலஸ்தானத்திலேயே வன்முறையை அறங்கேற்றியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐயப்ப பக்தர்களை கண்மூடித்தனமாக தாக்கியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். சென்னையில் மழை நின்று இன்றோடு ஒரு வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்கள் இன்னமும் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் இருக்கிறது. முறையான மருத்துவ உதவிகள் கிடைக்காமல் எங்கு பார்த்தாலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழை பாதித்த ஒரு சில இடங்களில் தூய்மை பணி மேற்கொள்வதாக சொல்லிக்கொண்டு இந்த ஆட்சியாளர்கள் மைதா மாவை தூவி வைப்பது மிகவும் கொடுமையாக இருக்கிறது. பேரிடர் காலங்களில் மக்களை காக்க வேண்டிய வருவாய் துறை, மின்சார துறை, சுகாதாரத்துறை போன்ற அரசுத்துறைகளோ இன்றைக்கு வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு தங்களது நிர்வாக திறமையின்மையால் தமிழக மக்களுக்கு பயனளிக்கின்ற வகையில் எதையும் செயல்படுத்த தெரியாமல் அனைத்து அரசு துறைகளும் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு இந்து சமய அறநிலையைத்துறையும் விதிவிலக்கல்ல. இவர்களும் தங்கள் பங்குக்கு கடவுளே கதியென்று வரும் பக்தர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள். எனவே, ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களை தாக்கிய தற்காலிக பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக கோவில்களுக்கு பக்தியோடு வருபவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித ஏற்றத்தாழ்வுகளுக்கும் இடமளிக்காமல் அனைவரையும் சமமாக மதித்து நடக்கவேண்டும். திமுக தலைமையிலான அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையைத்துறையினர், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இதனை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே கந்தசஷ்டி விழாவின் போது திருச்செந்தூர் ஆலயத்தில் பக்தர்களை வெகுநேரம் காக்க வைத்து வசதி படைத்தவர்களை மட்டும் முன்னுரிமை அளித்து கடவுளை தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டது. அதுவும் ஒரு நபருக்கு 1000 ரூபாய் என்று முறைகேடாக வசூலித்து மஞ்சப்பையில் போட்டு கொண்டதையும் இந்த நாடே பார்த்தது. தற்போது ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலமாக இருப்பதால் திமுகவினர் தங்களது வழக்கமான பாணியில் மஞ்சப்பை வசூலில் இறங்கிவிடாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக தலைமையிலான விளம்பர அரசு உடனே எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.