சுவாமி ஐயப்பன் என்றாலே திருமணமாகாத தெய்வம் என்பது பலரும் எண்ணும் விஷயம். ஆனால் கேரளாவிலேயே திருமண கோலத்தில் காட்சி தரும் ஐயப்பன் திருக்கோவிலும் உள்ளது. திருமண பாக்கியம் வேண்டுவோருக்கு அருள் செய்யும் இந்த கோவிலை பற்றி தெரியுமா?
தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவில் தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது ‘ஆரியங்காவு’ ஐயப்பன் கோவில். எப்படி முருகபெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளதோ, அதுபோல ஐயப்ப சுவாமிக்கும் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன.
இதில் திருமண கோலத்தில் ஐயப்ப சுவாமி காட்சி தரும் ஸ்தலம்தான் ஆரியங்காவு. சபரிமலை போல ஐயப்பன் இங்கு அமர்ந்த கோலத்தில் அல்லாது மதம் கொண்ட யானையை வீழ்த்தி அதன்மேல் அமர்ந்த கோலத்தில் ’மதகஜ வாகன ரூபனாக’ காட்சி தருகிறார். ஐயப்ப ஸ்வாமியின் இருபுறமும் பூரண தேவி, புஷ்கலை தேவியர் சகிதம் காட்சி தருகிறார் ஐயப்ப ஸ்வாமி. ஆரியங்காவு ஐயப்ப சுவாமிக்கு ‘கல்யாண சாஸ்தா’ என்ற பெயரும் உண்டு.
புஷ்கலை தேவியை சுவாமி ஐயப்பன் மணம் செய்யும் விழா ஆண்டுதோறும் டிசம்பரில் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. திருமண வரன் தள்ளிக்கொண்டே போவது, வரன் கிடைக்காமல் மணமாகாமல் இருப்பவர்கள் ஆரியங்காவு ஐயப்பனை வந்து வேண்டினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.