பெய்ஜிங்: சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாகச் சீனா உலக சுகாதார அமைப்பிற்கு விளக்கம் கொடுத்துள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா பரவ தொடங்கியது. அது உலகெங்கும் நாம் இதுவரை பார்க்காத அளவுக்கு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.
வேக்சின் தொடங்கி பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பிறகே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இன்னும் கொரோனாவின் தோற்றம் குறித்த தகவல்களைத் தெளிவாக இல்லாத நிலையில், அடுத்த மீண்டும் ஒரு பாதிப்பு அங்கே பரவ ஆரம்பித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த அக்டோபர் 2023 முதலே சீனாவின் வடக்குப் பகுதியில் குழந்தைகளிடையே சுவாச கோளாறு அதிகரித்துள்ளது. இதை உலக சுகாதார அமைப்பும் கண்காணித்தே வந்துள்ளது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகளிலும் குழந்தைகள் அதிகம் நிரம்பி வழிந்தனர். இந்தச் சூழலில் தான் அதிகரிக்கும் நிமோனியா பாதிப்பு தொடர்பாகத் தகவல்களைப் பகிருமாறு சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த விவகாரத்தில் சீனா பொதுவெளியில் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. அதேநேரம் உலக சுகாதார அமைப்பு இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. சீன நோய் கட்டுப்பாடு அமைப்பு மற்றும் பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம் விளக்கம் கொடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு:
இந்த மீட்டிங் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெய்ஜிங் மற்றும் லியோனிங் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும், அங்கே அசாதாரணமான அல்லது புதுமையான நோய்க்கிருமிகள் எதையும் கண்டறியவில்லை என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே நமக்கு தெரிந்த பல நோய்க்கிருமிகளால் சுவாச பாதிப்பை ஏற்படுத்தும். அப்படி ஏற்பட்ட பாதிப்பு தான் இது. சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதனால் மருத்துவமனைகளே திணறும் அளவுக்கு அதிகப்படியான நோயாளிகள் அட்மிட் ஆகும் சூழல் எல்லாம் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். சீனாவில் என்ன சூழல் நிலவுகிறது என்பதை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம். நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப அறிவுறுத்தல் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
சுவாச நோய்ப் பாதிப்பு:
அதேநேரம் சீனாவில் உள்ளவர்கள் சுவாச நோய் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது. காய்ச்சல், கொரோனா உள்ளிட்ட சுவாச நோய்க்கிருமிகளுக்கு எதிராக வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் வெளியே சென்று அதை மற்றவர்களுக்குப் பரப்பாமல் வீடுகளிலேயே இருக்க வேண்டும். மாஸ்க் அணிய வேண்டும் என பல வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ளது.
அதேநேரம் சீனாவுக்குச் செல்வோருக்கு எனக் குறிப்பிட்டு எந்தவொரு பரிந்துரைகளையும் உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை. அடுத்த மாதம் வந்தால் சீனாவில் கொரோனா பரவ தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிடும். கொரோனா சமயத்திலும் கூட சீன அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு இல்லாததே நிலைமை கையைவிட்டுப் போக முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. இப்போது மீண்டும் கிட்டதட்ட அதே ஒரு சூழல் சீனாவில் ஏற்பட்டுள்ளது.திடீரென அங்கே நிமோனியா பரவுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.