விரைவில் கர்ப்பம் தரிப்பது எப்படி?

by Editor News

சில தம்பதிகள் திருமணமான அடுத்த மாதமே கர்ப்பமாகிவிடுகிறார்கள். ஆனால், பலருக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கும், விரக்திக்கும் ஆளாகின்றனர். இந்த கவலையை போக்க முதலில் விரைவில் கர்ப்பம் தரிப்பது எப்படி என்பதற்கான சில உதவிக்குறிப்புகளை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அண்டவிடுப்பின் (Ovulation) கணக்கீடு :

முதலில் உங்கள் அண்டவிடுப்பின் சுழற்சியை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அண்டவிடுப்பின் ஐந்து நாட்களுக்கு முன்பும், அண்டவிடுப்பின் அன்றும் உடலுறவு கொண்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அண்டவிடுப்பு என்பது கருப்பையில் இருந்து முதிர்ந்த கருமுட்டை வெளியாவதாகும். இது வெளியான பிறகு, ஃபெலோபியன் குழாய்க்கு நகர்ந்து 12 முதல் 24 மணி நேரம் வரை அங்கேயே இருக்கும். அப்போது கருவுற வாய்ப்புள்ளது. விந்தணுக்கள் சரியான சூழலில் இருந்தால், உடலுறவுக்குப் பிறகு 5 நாட்கள் வரை பெண்ணின் இனப்பெருக்க பாதைக்குள் அதால் வாழ முடியும். கருமுட்டை வெளியாகும் சமயத்தில் ஃபெலோபியன் குழாய்களில் உயிருள்ள விந்தணுக்கள் இருக்குமெனில், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும்.

சராசரியாக 28 நாள் மாதவிடாய் சுழற்சியில், பொதுவாக, அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பு அண்டவிடுப்பு நிகழ்கிறது. இருப்பினும், ஒவ்வொரு நபரின் சுழற்சியின் நீளமும் வேறுபடும், ஒருவேளை உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியாக இருக்குமெனில், மாதவிடாய் நாட்காட்டியின் உதவியுடன் உங்கள் அண்டவிடுப்பை அறிந்துக்கொள்ளலாம்.

அதோடு அண்டவிடுப்பின் அறிகுறிகளை வைத்தும் இதனை தெரிந்துகொள்ளலாம்.

யோனி சுரப்புகளில் ஏற்படும் மாற்றம் :

அண்டவிடுப்பு ஏற்படுவதற்கு சற்று முன், தெளிவான, ஈரமான யோனி சுரப்பு அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம். அண்டவிடுப்பிற்கு பின்னர், கர்ப்பப்பை வாய் சளி குறைந்து, தடிமனாகவும், திட்டுதிட்டாகவும், குறைவாகவும் இருக்கும்.

உடல் வெப்பநிலையில் மாற்றம் :

அண்டவிடுப்பின் போது உங்கள் உடலின் வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படும். அடித்தள உடல் வெப்பநிலையை அளவிட பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தெர்மோமீட்டரைப் பயன்படுத்தி, படுக்கையில் இருந்து எழுவதற்கு முன்பு தினமும் காலையில் உங்கள் உடலின் வெப்பநிலையை அளவிட்டு, அந்த முடிவுகளை குறித்துக்கொள்ளவும். உங்கள் உடலின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு 2 முதல் 3 நாட்களுக்கு முன்பு உடலுறவு கொண்டால், கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்.

நீங்கள் விரும்பினால் ஓவுலேசன் கிட் வாங்கியும் முயற்சிக்கலாம். இது உங்களுக்கு அண்டவிடுப்புக்கான வாய்ப்புள்ள நாட்களை கண்டறிய உதவும். இந்த கிட்-இல் உங்கள் சிறுநீரை கொண்டு சோதிப்பதன் மூலம் அண்டவிடுப்பின் முன் நிகழும் ஹார்மோன்களின் எழுச்சியை கண்டறியலாம். அதில் பாசிடிவான முடிவு வந்து சுமார் 36 மணி நேரத்திற்குப் பிறகு அண்டவிடுப்பின் சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் :

1. தொடர்ந்து உடலுறவு கொள்ளுங்கள்

தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு விரைவில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

அண்டவிடுப்புக்கு நெருங்கிய நாட்களில் உடலுறவு கொள்ளுங்கள்
தினமும் உடலுறவு கொள்வது சாத்தியமில்லை என்றால் உங்கள் மாதவிடாய் முடிந்தவுடன் வாரத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்ளுங்கள்.

2. உடல் எடையை பராமரிக்கவும்

அதிக எடை மற்றும் குறைந்த எடை கொண்ட பெண்களுக்கு அண்டவிடுப்பின் சுழற்சியில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்களுக்கு மருத்துவர்கள் ஸ்பைனா பிஃபிடா மற்றும் பிற நரம்புக் குழாய் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக ஃபோலிக் அமில மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள்.

கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க தவிர்க்க வேண்டியவை :

1. காஃபின் உட்கொள்ளும் அளவை குறைக்கவும்

ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம்களுக்கு குறைவான காஃபின் உட்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கப்படாது என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் காபி மட்டுமே குடிக்க வேண்டும்.

2. கடுமையான உடற்பயிற்சிகளை அதிக நேரம் செய்யக்கூடாது
வாரத்திற்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான, தீவிரமான உடற்பயிற்சி செய்வது அண்டவிடுப்பின் சுழற்சியை பாதிக்கும்.

3. மருத்துவரிடம் எப்போது ஆலோசிக்க வேண்டும்?

நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தாலோ, ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக கருத்தரிக்க முயற்சித்திருந்தாலோ, உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது கருதரித்தல் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

Related Posts

Leave a Comment