தூய்மையான காற்று, தண்ணீர், உணவு இந்த மூன்றும் தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை. அதற்கு நீங்கள் கிராமத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அபார்ட்மெண்ட் வீடுகளில்கூட மரம், செடி, கொடி வளர்க்கலாம்.
காய்கறி கழிவுகளைச் சேர்த்து வைத்து, அதன் மூலம் கிடைக்கும் உரத்தை இந்தச் செடிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். வீட்டில் மரம் வளர்க்கிறவர்கள், மரத்திலிருந்து உதிரும் இலைகளையும், வீட்டில் சேரும் பச்சை கழிவுகளையும் சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை உரத்தையும் தயாரிக்கலாம்.
இங்கு வீட்டில் நீங்களே சொந்தமாக கீரை எப்படி வளர்க்கலாம் என்பதை பாருங்கள்
மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பு எளிதான விஷயம். விதைப்பு, பாசனம், அறுவடை இவை மூன்றும்தான் கீரை சாகுபடிக்கு முக்கியம். கீரை வளர்ப்பில் தொட்டியில் வைத்து வளர்ப்பது, தரையில் வளர்ப்பது என இரண்டு வகை உள்ளது.
இதில் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, சிவப்பு தண்டுக் கீரை, பச்சை தண்டுக் கீரை, பருப்புக் கீரை, காசினி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி இவற்றைத் தொட்டியில் வளர்க்கலாம். புளிச்சக்கீரை, அகத்திக்கீரைகளை தரையில் வளர்க்கலாம்.
தோட்டம் போட வசதி இல்லாதவர்கள் ஒரு பிளாஸ்டிக் சாக்கை எடுத்து, அதில் பாதி அளவுக்குத் தென்னை நார்க் கழிவு உரத்தை நிரப்பி, அதில் 10 கிராம் கீரை விதையைத் தூவினால் போதும், 20 நாள்களில் கீரை கிடைத்துவிடும்.
கீரை விதைகள் மிகவும் சிறியதாக இருக்கும், எனவே அதை விதைக்கும்போது, மேலோட்டமாகத் தூவக் கூடாது, மண்ணுடன் நன்றாகக் கலந்துவிட வேண்டும். பூவாளியைப் பயன்படுத்தி தண்ணீர் விடுவது நல்லது.
மணத்தக்காளி கீரை நன்றாகப் படர்ந்து வளரக் கூடியது , எனவே ஒரு தொட்டியில் ஒரு செடி வைக்கலாம். கீரை விதை விதைத்து 15 முதல் 20 நாள்களுக்குள் சாகுபடி செய்துவிடலாம்.
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகளை அறுவடை செய்யும் போது முழுதாகப் பிடுங்க வேண்டாம். பாலக்கீரையை கிள்ளக் கிள்ள வளரும். அதேபோல அரைக்கீரை, சிறுகீரையை அறுக்க அறுக்க வளர்ந்து கொண்டே இருக்கும்.
பூச்சி தொல்லைக்கு :
கீரைகளுக்கு வேப்பம்புண்ணாக்கை தண்ணீரில் ஊறவைத்து அந்தக் கரைசலை பயன்படுத்தலாம்.
1 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் புண்ணாக்கு என்ற விகிதத்தில் கலந்து, அது கரைந்த பின் அந்தக் கரைசலை எடுத்து, அதனுடன் 10 மடங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். இதனால் பூச்சித் தொல்லைகள் இருக்காது.