உங்கள் பிள்ளையின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது என்பது அவர்களுக்கு சமச்சீரான உணவு வழங்குவதையும் தாண்டி, அவர்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சில ஊட்டச்சத்து குறைபாடுகளை புரிந்து அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான முயற்சிகளும் அடங்கும்.
ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளில் ஏற்படக்கூடிய 45 சதவீத இறப்புகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அமைகிறது என்று உலக சுகாதார அமைப்பு குறிக்கிறது. எனவே குழந்தைகளில் அதிகம் காணப்படக்கூடிய சில பொதுவான ஊட்டச்சத்தை குறைபாடுகள் என்னென்ன மற்றும் அதனை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இரும்பு சத்து குறைபாடு:
இரும்பு என்பது நுரையீரலில் இருந்து உடல் திசுக்களுக்கு ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஒரு முக்கிய பங்கை வகிக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து. இது சைலன்டாக பல உடல் செயல்பாடுகளில் பங்கு கொள்கிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் பிள்ளையின் இரும்பு சத்து அளவுகளை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கு பீன்ஸ், சிவப்பு இறைச்சி, பீட்ரூட் சாறு போன்ற உணவுகளை நீங்கள் கொடுக்கலாம்.
வைட்டமின் D குறைபாடு:
சன்ஷைன் வைட்டமின் என்று அழைக்கப்படும் இந்த வைட்டமின் D ஊட்டச்சத்து எலும்பு வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 400IU வைட்டமின் D சத்து தேவைப்படுகிறது. இதுவே 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 600IU அல்லது அதற்கு மேல் அவசியமாக பரிந்துரைக்கப்படுகிறது. பால், தயிர், தானியங்கள் மற்றும் மீன் வகைகளில் வைட்டமின் D சத்து நிறைந்துள்ளது. அதே போல காலை வெயிலில் கொஞ்சம் நிற்க வைக்கலாம்.
சிங்க் குறைபாடு:
பல்வேறு விதமான வேலைகளை செய்யக்கூடிய இந்த தாதுவானது உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவுசார் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. பிறப்பு முதல் வளரிளம் பருவம் வரை சிங்க் தேவையானது மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு தகுந்தார் போல் நமது உணவை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இறைச்சி, பால் சார்ந்த பொருட்கள், விதைகள், நட்ஸ் மற்றும் முழு தானியங்கள் போன்றவை சிங்க் நிறைந்த உணவுகளாக கருதப்படுகிறது.
கால்சியம் குறைபாடு:
வலுவான எலும்புகளை அமைப்பதற்கு கால்சியம் உதவுகிறது. பால் மூலமாக கிடைக்கும் கால்சியம் தவிர அடர்ந்த பச்சை இலை காய்கறிகள், டோஃபு, மீன் மற்றும் தானியங்களிலும் கால்சியம் நிறைந்துள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் போதுமான அளவு கால்சியம் கொடுக்கும் பொழுது வாழ்நாள் முழுவதும் அவர்களது எலும்பு ஆரோக்கியம் சிறப்பான முறையில் அமைப்பதற்கு நீங்கள் உதவுகிறீர்கள்.
வைட்டமின் B12 குறைபாடு சிவப்பு ரத்த அணுக்களுக்கு ஆதரவளிப்பது, அறிவுசார் திறன் மேம்பாடு மற்றும் ஆற்றல் மாற்றம் போன்ற செயல்பாடுகளில் வைட்டமின் B12 முக்கிய பங்கை கொண்டுள்ளது. இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்களில் இந்த ஊட்டச்சத்து அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக வைட்டமின் B12 குறைபாடு கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளில் இந்த ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது.
பொட்டாசியம் குறைபாடு:
எலும்பு வளர்ச்சியை ஆதரிப்பது, நரம்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு பொட்டாசியம் சத்து முக்கியம். பழங்கள், காய்கறிகள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது.
நார்ச்சத்து குறைபாடு:
நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் இதயத்தின் நல்வாழ்வை பராமரிப்பதில் நார்ச்சத்து முக்கிய பங்கு கொண்டுள்ளது. பேரிக்காய், ஆப்பிள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளை உங்கள் குழந்தைகளின் அன்றாட டயட்டில் சேர்ப்பதன் மூலமாக அவர்களுக்கு நார்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம்.