முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்வது வழக்கம். தரிசனத்திற்காக முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலை கோயிலுக்கு செல்ல படிப்பாதை யானை ,பாதை பிரதான வழியாக உள்ளது. அத்துடன் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது .விரைவாகவும், இயற்கை அழகை ரசித்த படியும் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயிலில் செல்லலாம்.
இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழனி கோயில் மலையடிவாரத்தில் மாலை 6 மணிக்கு மேல் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது; பழனி மலைக்கோயிலில் உச்சிகால பூஜைக்கு பிறகு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர்.ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.