புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக கடற்கரை சாலை உள்ளது. கடந்தவாரம் புதுவை கடல்பகுதியில் குருசுகுப்பத்திலிருந்து தலைமை செயலகம் வரையிலும் செந்நிறமாக கடல்நீர் மாறி காணப்பட்டது. இது புதுவை மக்களிடையே ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கடலில் கலக்கும் கால்வாய் கழிவுநீரால் நிறம் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது.
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனமும், புதுவை மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கடல்நீரை எடுத்து ஆய்வு செய்தனர். கடல் நீர் மாதிரியை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர் நச்சுத்தன்மை வாய்ந்து நுண்ணுயிரிகளின் பெருக்கம் காரணமாக கடல்நீர் நிறம் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது ..
மீண்டும் இன்று கடல்நீரில் நிறம் மாறியிருந்தது. குருசுகுப்பத்தில் தொடங்கி பழைய துறைமுகம் பாலம் வரையிலும் இந்த நிறம் மாறி சுமார் 2 கிமீ தூரத்துக்கு பரவியிருந்தது. புதுவையின் விடுமுறை நாளையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கடற்கரைக்கு வந்திருந்தனர். அவர்கள் நிறம் மாறியிருந்த கடலை பார்வையிட்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். புதுவையில் நேற்று முன்தினம் சுமார் அரைமணி நேரம் கனமழை பெய்தது. வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ள நீர் கடலில் கலந்ததால் கடல்நீர் நிறம் மாறியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.