தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மாணவர்களின் வசதிக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 5ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி வரை 1,66,901 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 968 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். சான்றிதழ் பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்த மாணவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 269 என தெரிவிக்கப்பட்டுள்ளது.