ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 200 ரன்கள் குவித்துள்ளது.
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதாவது குஜராத், சென்னை, லக்னோ ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், மற்றொரு அணிக்கான போட்டியில் மூன்று அணிகள் உள்ளன. அதாவது மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் போட்டி போடுகின்றன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஐதராபாத் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் விவாந்த் சர்மா, மயங்க் அகர்வால் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த நிலையில், விவாந்த் சர்மா 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து மயங்க் அகர்வால் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் ஒரு ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் 4 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.