கர்ப்ப காலத்தில் ஒரு சிலருக்கு தோலில் இது போன்ற கருப்பு திட்டுகள்- மங்குகள் உருவாகலாம். இது நோயல்ல. அது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் ஒன்றாகும்.
எல்லா மாற்றங்களும் கர்ப்ப காலத்தில் சுரக்கக்கூடிய ஹார்மோன்களால் ஏற்படுகின்றது.
மெலனின் என்பது நம்முடைய தோல், முடி மற்றும் கண்களுக்கு நிறத்தை தரக்கூடிய மெலனின் நிறமி. இந்நிறமி ( pigment) கர்ப்ப காலத்தில் தற்காலிகமாக அதிகமாக சுரப்பதால் ஏற்படக்கூடிய மாற்றமே இது. மெலடோனின் அதிகமாக சுரக்க சுரக்க தோலில் கருமை படருகிறது. குறிப்பாக கன்னங்களில் பட்டர்பிளை போல கருமை ஒரு சிலருக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படலாம். மார்பிலும் வயிற்றிலும் அது போன்ற கருமை நிற திட்டுகள் தோன்றலாம்.
இதை கர்ப்ப கால கருமை மலாஸ்மா( melasma) என்று கூறுவர். அல்லது பிரக்னன்சி மாஸ்க் , ( mask of pregnancy) கர்ப்பகால முககவசம் என்றும் கூறலாம். ஏனெனில் குறிப்பாக உதடு கன்னம் தாடை மூக்கு போன்ற இடங்களில் மட்டுமே இந்த திட்டுத்திட்டான கருப்பு நிறத்தை அதிகமாக காணலாம். மேலும் வியர்வை அதிகமாக அல்லது உராய்வு ஏற்படக்கூடிய இடத்திலும் இந்த கருமை அதிகமாக இருக்கலாம்.
மற்ற இடங்களில் குறிப்பாக வயிற்றில் மேலிருந்து கீழாக கருப்பு நிற கோடு போன்று கருமை நிறம் படர்வதை காணலாம். இதற்கு லீனியா நிகரா( linea nigra) என்று கூறுவர் இதுவும் இந்த மெலனின் கூடுதலாக சுரப்பதால் ஏற்படும் மாற்றமே ஆகும். பெரும்பாலும் பிரசவத்திற்கு பல மாதங்களுக்கு பிறகு முழுமையாக மறைய விட்டாலும் கூட மங்கிவிடும். ஓரளவு கர்ப்ப காலத்திற்கு முந்தைய நிலையை அடையலாம்.
பொதுவாக இது பரம்பரையாக வரக்கூடிய மாற்றமாகும். ஒரு சிலருக்கு அதிகமாகவும் ஒரு சிலருக்கு லேசாகவும் ஏற்படும். ஒரு சிலருக்கு எந்த மாற்றங்களுமே ஏற்படுவதில்லை.
இதற்கென்று தனியாக எந்த மருத்துவமும் தேவையில்லை. இவ்வாறு கர்ப்ப காலத்தில் தோலில் கருமை நிறம் கூடுவது இயல்பானது என்பதை புரிந்து கொண்டாலே பிரச்சனை இல்லை.
இதற்கு ஏதாவது மருத்துவம் இருக்கிறதா அல்லது இதை எவ்வாறு தடுப்பது?
பொதுவாக இந்த கருமைப்படர்வது பிரசவத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விடும் சிலருக்கு முழுமையாக மறைந்து விடலாம். குறிப்பாக சிலவற்றை கட்டாயமாக செய்யக்கூடாது . அவை என்ன?
பெண்கள் முடிந்தவரை அதிகமான வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஏராளமான மேக்கப் சாதனங்களை உபயோகப்படுத்துவதையும் ப்ளீச்சிங் போன்ற சிகிச்சைகளையும் செய்யக்கூடாது
வெளியே செல்லும் பொழுது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் சூரிய தடை கிரீம்களை உபயோகப்படுத்த வேண்டும்.
முடிந்தவரை முழுமையாக உடலை மூடும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் .
முகத்திலும் வெயில் படாத வண்ணம் மூடிக்கொள்ளலாம்.
இதுபோல சிலவற்றை செய்வதன் மூலம் மங்கு ஏற்படுவதைக் குறைக்கலாம்.
ஒரு சிலருக்கு அப்படியே இந்த மங்குகள் தங்கி விடுவதும் உண்டு அவர்கள் தகுந்த தோல் மருத்துவரை சந்தித்து மங்குகளை குறைப்பதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.