சென்னையில் கொளுத்தும் வெயில்.. 2வது நாளாக சென்னையில் 104 டிகிரியை தாண்டியது ..

by Editor News

சென்னையில் 2வது நாளாக 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வரும் நிலையில், 107 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியபோதிலும், கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. வெயிலின் தாக்கமும் பெரிதாக பாதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படியே நேற்று 12 மாவட்ட மாவட்டங்களில் வெயில் சதமடித்தது. அந்தவகையில் சென்னையில் இன்று 2-வது நாளாக வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்ததாவது, நண்பகல் 12 மணியளவில் சென்னையில் வெயிலின் அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. பொதுவாக அதிகபட்ச வெப்பநிலை சில மணி நேரங்கள் நீடிக்கும். அத்துடன் சென்னையில் இன்றைய வெயிலின் தாக்கம் 107 டிகிரி வரை இருக்கும் என தெரிவித்தார். மேலும், சென்னையின் கடலோர பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும், இத்தனை நாட்கள் மோக்கா புயல் காரணமாக வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மோக்கா புயல் மியான்மர் இடையே கரையைக் கடந்தபோது இந்திய பகுதியில் இருந்த ஈரப்பதங்களை எடுத்துச்சென்று விட்டதாகவும், தற்போது தரைக்காற்று வீசத்தொடங்கியுள்ளதால் சென்னை சுற்றியுள்ள அமைத்து பகுதிகளிலும் 40 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாக வெப்பம் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக வெப்பம் அதிகரிக்கும் போது கடல்காற்று வந்து வெப்பத்தை தணிக்கும். ஆனால் நேற்றும், இன்றும் கடல்காற்று தாமதமாகவே வருவதாகவும், அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு வடமேற்கு திசையில் இருந்து வீசக்கூடிய தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இதனால் 18-ம் தேதி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். அதன்பிறகு உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment