உலகின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். நிறுவனத்துடன் நடத்திய டீலில் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அவர் அறிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில் அதில் இருந்து வெளியேறுவதாக கூறிய மஸ்க், தற்போது தன்முடிவை மாற்றிக்கொண்டு ட்விட்டரை முழுமையாக வாங்கி கையகப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்ற நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி(CEO) பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி (CFO) தலைமை சட்ட அதிகாரி(CLO) உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் செய்துவந்தார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் பிரபலங்களை அங்கீகரிக்க வழங்கப்படும் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் என்று அறிவித்தார். கட்டணம் கொடுத்து யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார்.
கட்டணம் செலுத்தாத உலக அளவிலான பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கினார். ட்விட்டர் பறவையின் லோகோவை மாற்றி நாயின் படத்தை வைத்தார். ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். அவருடைய அதிரடி செயல்பாடுகள் ட்விட்டர் பயனாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், ட்விட்டர் தலைமைப் பொறுப்பில் தொடரவா? வேண்டாமா? என்று எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார்.
பெரும்பாலானவர்கள் எலான் மஸ்க்கை தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், ‘ட்விட்டரை மேலாண்மை செய்ய தலைமைச் செயல் அதிகாரி பணிக்கு புதிதாக ஆள் எடுத்துள்ளேன். அந்தப் பெண் 6 வாரங்களில் அவருடயை பணியைத் தொடர்வார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.