சூடானிலிருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சூடானில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள பல்வேறு வெளிநாட்டினர்கள் மீட்க அந்தந்த நாடுகள் தீவிரமாக ஈடுபட்டன. இதனையடுத்து அங்கு சிக்கியுள்ள சுமார் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்னும் மீட்புப் பணியை மத்திய அரசு தொடங்கியியது. அதன்படி, சூடானின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலம் சூடான் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மற்றும் விமானம் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர். ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப் படையின் தனி விமானம் மூலமாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதில் சூடானிலிருந்து மீட்கப்படும் தமிழர்களுக்கு ஆகும் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டது. அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சூடானிலிருந்து மீட்கப்பட்ட 12 தமிழர்கள் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் அடைத்து வரப்பட்டனர். அவர்களை விமான நிலையத்தில் அயலக தமிழர் நலவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். இதனுடைய சூடானிலிருந்து இந்தியர்களை மீட்கும் ‘ஆப்ரேஷன் காவேரி’ திட்டம் முடிவடைந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 3,762 இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், இந்த பணிக்கு உதவிய சவுதி அரேபியா உள்ள நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.