‘எமிஸ்’ அடையாளர் சான்றிதழை பதிவு செய்ய புதிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் எமிஸ் என்றழைக்கப்படும் கல்வி மேலாண்மைத்தகவல் அமைப்பு என்னும் அடையாளச் சான்றிதழை பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்தவகையில் எமிஸ் அடையாளச்சான்றிதழை முறையாக பராமரிக்க புதிய வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ * யு.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பில் மற்றொரு பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் ஏற்கனவே எமிஸ் அடையாளச்சான்றிதழ் உள்ளதா என்பதை சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர் உறுதிசெய்த பின்னரே புதிய எமிஸ் அடையாளச்சான்றிதழ் வழங்கவேண்டும்.
* எமிஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்து பெற்றோருக்கு வழங்க வேண்டும். அதனை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
* மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் பெற்றோர் தொலைபேசி எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். அதன் மூலமே மாற்றங்கள் மேற்கொள்ள இயலும்.
* 2-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் பள்ளி மாற்றம் செய்து சேரும்போது அவர்களுக்கு புதிய எமிஸ் அடையாளச்சான்றிதழ் உருவாக்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
* மாணவர்களுடைய பள்ளியின் விவரம் மற்றும் எமிஸ் அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றை புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.