2022 டிசம்பர் 1 அன்றில் இருந்து தலைமை பதவி ஏற்றுள்ள இந்திய 2023 ஆண்டிற்கான ஜி-20 நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. இதனை முன்னிட்டு ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதற்காக இந்தியாவின் பல முக்கிய தளங்களில் ஜி 20 மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உயர் அதிகாரி டொனால்டு லூ தெரிவித்தார்.
முதல் முறையாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை பைடன் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும், இந்தியா, அமெரிக்கா நல்லுறவிற்கு இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் பேசும் போது, ‘2023 ஒரு பெரிய ஆண்டாக இருக்கும். குவாட் (QUAD )உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியாவில் இந்தியா G-20 ஐ தலைமை ஏற்று நடத்துகிறது. அமெரிக்கா APEC ஐ நடத்துகிறது. ஜி7 மாநாட்டை ஜப்பான் நடத்துகிறது. இது நம் அனைவருக்கும் நமது நாடுகளை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளை வழங்கும்’ என்றார்.
ஜோ பைடனின் இந்திய பயணம், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷிய நாட்டின் மீதான தடைகள் மற்றும் உக்ரைனுக்கான ஆதரவு குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் டோனி பிளிங்கன், கருவூலச் செயலர் ஜேனட் யெலன், வர்த்தகச் செயலர் ஜினா ரைமொண்டோ போன்ற மூத்த தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து டெல்லியில் நடந்த இந்தியா-அமெரிக்க பேச்சுவார்த்தை மன்றத்தில் கலந்து கொண்டனர்.