டாஸ்மாக் மூலமாக கடந்த ஆண்டை விட ரூ.8047.91 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.44,098.56 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாய் மூலமாக ரூ. 10,401.56 கோடியும், மதிப்புக்கூட்டு விற்பனை வரி மூலமாக ரூ. 33697 கோடியும் என மொத்தமாக ரூ. 44,098.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.இது கடந்த 2021 -2022 ஆம் ஆண்டு வருவாயான ரூ. 36,050.65 கோடியை விட 8,047.91 கோடி அதிகமாகும்.
கடந்த 2003 – 2004 ஆம் ஆண்டிலிருந்து 2022 – 2023 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மூலமான வருவாய் படிபடிப்படியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2018 – 2019 ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் மூலமான வருவாய் 30 ஆயிரம் கோடியை கடந்துள்ளது. இந்த நிலையில் 2022 – 2023 ஆம் ஆண்டில் இது 44 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.