சபரிமலையில் பிரசித்தி பெற்ற பங்குனி ஆராட்டு விழா கடந்த மார்ச் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற்றது.
பத்து நாள் நடைபெறும் ஆராட்டு விழாவில் ஏப்ரல் 4ஆம் தேதி நேற்று இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது, திருவிழாவின் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.
ஐயப்பன் ஆராட்டு திருநாளான இன்று சபரிமலையில் இருந்து காலை 9 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, பம்பை ஆற்றில் ஆராட்டு நடைபெறும். பின்னர் ஐயப்பனை அலங்கரித்து பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் முன்பாக 3 மணி நேரம் வரையிலும் வைத்திருப்பார்கள்.
பம்பையில் காட்சி தரும் ஐயப்பனை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யலாம். தொடர்ந்து இன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மேலும் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பூஜைக்காக ஏப்ரல் 11 முதல் 19 வரை நடை திறக்கப்படும். ஏப்ரல் 15 ல் சபரிமலையில் விஷுக்கணி தரிசனம் மற்றும் விஷு பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.