அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப்
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.
விளக்கம்:
பிறக்கும் போதே உடலுக்குள் வைத்த இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும் அதை கட்டி இருக்கின்ற மலங்களையும் நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான வழி முறையையும் வைத்து அருளி இருப்பதை உணர்ந்து, அந்த வழி முறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை இல்லாமல் செய்து, முக்தி நிலையை பெற்றவன் ஆகி இல்லாமல், தாம் செல்ல வேண்டிய வழி முறையில் இருந்து மாறுதல் அடைந்து, உலக பற்றுக்களுக்கான தத்துவங்களையே நினைத்துக் கொண்டு, இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக் கொள்ளாமல், உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து, உலக ஆசைகளில் மயங்கி இருக்கின்ற பக்குவமில்லாத சீடனுக்கு உண்மையான ஞானத்தை கொடுக்க மாட்டார்கள் குருவானவர்கள்.