அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.
ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டிரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை டிரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதாவது அவர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு இது வழிவகுக்கும். இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதாவதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர்கள் யாரும் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டது இல்லை. அந்த வகையில் டிரம்ப் தான் முதல் நபர்.