ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ஆம் தேதி தொடங்கும் நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொடரில் களமிறங்கும் 10 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் இம்முறை தனது முன்னணி வீரரான ரிஷப் பண்ட் இல்லாமல் களம் இறங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கோர கார் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வரும் ரிஷப் பண்ட் காலவரையின்றி ஓய்வில் உள்ளார். இதன் காரணமாக அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் வெளியேறியுள்ளார். இதைத் தொடர்ந்து 2023 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் அணி குறித்தும் ரிஷப் பண்டின் இழப்பு குறித்து முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது, ரிஷப் பண்ட் அணியில் இல்லாது டெல்லி அணிக்கு பெரும் இழப்பாகும். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சிறந்த வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட்.
தொடக்க வீரராகவும் சரி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் சரி தனது பேட்டிங் மூலம் அணிக்கு வெற்றியை தேடி தரக் கூடியவ் ரிஷப் பண்ட். டெல்லி அணியின் கேப்டனாக இதயமும், உயிருமாக இருந்தவர் ரிஷப். அவரின் இடத்தை வேறு நபர் கொண்டு நிரப்ப முடியாது. இருப்பினும் இளம் வீரர்களை கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த டெல்லி அணி தயாராக உள்ளது.