கடந்த சில மாதங்களாகவே உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. முன்னணி டெக் நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) சமீபத்தில் தனது 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்து.
இதுபோன்ற தொடர் லே ஆப் அறிவிப்புகள் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு திறந்த மடல்(Open letter) ஒன்று எழுதி பல கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.சுமார் 1,400 ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டு சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ளனர். அவர் அந்த கடிதத்தில், சுந்தர் பிச்சை அவர்களே நிறுவனம் உலகம் முழுவதும் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், ஊழியர்களின் குரலை நிறுவனம் செவிகொடுத்து கேட்கவில்லை. எனவே, நாங்கள் ஒன்றிணைந்து உலகம் முழுவதும் கேட்கும் விதமாக கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
முதலாவதாக, நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில், புதிதாக பிறரை வேலைக்கு எடுக்கும் செயலை நிறுத்தி வைக்க வேண்டும். வேலையை விட்டு நீக்குவதற்கு முன்னாள் ஊழியர்களிடமே பேசி அவர்கள் வேலையை விட்டு தாமாக விலகும் எண்ணத்தில் இருக்கின்றார்களா என்று கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள். இரண்டாவதாக, ஏற்கனவே வேலைவிட்டு நீக்கப்பட்ட ஆல்பாபெட் நிறுவன ஊழியர்களுக்கு மறுவாய்ப்பு தர முயற்சி செய்யுங்கள். தேவைக்கேற்ப நிறுவனத்திற்குள்ளே இடமாற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
மூன்றாவதாக, போர் யுத்தம் நடைபெறும் உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளை சேர்ந்த நமது ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதில் இருந்த தவிர்க்க வேண்டும். அவர்கள் இந்த சூழலில் நாட்டிற்கு திரும்பவது பாதுகாப்பு இல்லை. நான்காவதாக, மகப்பேறு விடுமுறை போன்ற திட்டமிட்ட விடுமுறைகளில் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம். அவர்கள் மீண்டும் அலுவலகம் திரும்பி, சக ஊழியர்களை பார்த்து Bye சொல்வதற்கு வாய்ப்பு தாருங்கள்.ஐந்தாவதாக பாலினம், வயது, இனம், சாதி, மதம் போன்ற எந்த முறையிலும் நிறுவனத்தில் பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது.
எனவே, நமது நிறுவனம் மேற்கண்டவற்றை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். நமது நிறுவனத்தின் கோட்பாடான, Don’t be evil (தீமையாக இருக்காதே) என்பதை பின்பற்றும் என நம்புகிறோம். இது உங்களால் செய்யக்கூடிய ஒன்று தான் என நாங்கள் அறிகிறோம் என கடிதத்தில் கூறியுள்ளனர்.