ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சந்திவாந்த நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரிலிருந்து 133 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஹிந்துகுஷ் மலைத்தொடரில் 6.6 என ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதிபடுத்தியுள்ளது. இரவு 10.17 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அண்டை நாடுகளான துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி , ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம் , ஹரியானா உள்பட இந்தியாவின் வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
தலைநகர் டெல்லியில் இரவு 10 மணி அளவில் 2 நிமிடங்கள் வரை நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கி, பொருட்கள் கீழே விழுந்ததால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, குழந்தைகளை தூக்கிக்கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதே போல், பஞ்சாப் உத்தரப் பிரதேசம், ஹரியானாவிலும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நில அதிர்வு காரணமாக ஜம்மு – காஷ்மீரில் சில பகுதிகளில் செல்போன் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒருமுறை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தானில் வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். வட மேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பகுதிகளில், நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 19 வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் காரணமாக க்மன் மாகாணத்தில் 2 பேர் பலியாகி உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.