302
திருமந்திரம் – பாடல் #1677: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)
உடலிற் றுலக்கிய வேடமுயிர்க் காகா
வுடல்கழன் றால்வேட முடனே கழலு
முடலுயி ருள்ளமை யொன்றோர்ந்து கொள்ளாதார்
கடலி லகப்பட்ட கட்டையொத் தாரே.
விளக்கம்:
ஞானிகளின் உடலில் இருந்து வெளிப்படுகின்ற வேடமானது அவர்களின் உயிர் நிலையை குறிப்பது ஆகாது. அவர்கள் தங்களின் உடலை நீக்கி விட்டால் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும் அதனுடனே சேர்ந்து நீங்கி விடும். உடலோடு இருக்கும் உயிருக்கு உள்ளே அமைந்து இருக்கின்ற ஒரு பரம்பொருளை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர்கள் கடல் அலைகளில் அகப்பட்டுக் கொண்ட கட்டையைப் போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.