உறிந்து குடிக்கும் வகையிலான குறுகிய வாய் பகுதிகளை உடைய பாட்டில்களை பயன்படுத்தலாம். இவற்றில் பாக்டீரியாக்கள் இருக்கும் அபாயம் குறைவானதாக இருக்கும்.
சமீபத்தில் ஆய்வாளர்கள் சிலர் குழுவாக சேர்ந்து அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை வைத்து ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்கள். அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஆய்வில் நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் நமது டாய்லெட் சீட்டில் இருப்பதைவிட 40 ஆயிரம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தண்ணீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் அவற்றின் மேல் மூடி, தண்ணீர் பாட்டில் போன்ற பாகங்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியுள்ளார்கள். அதில் முக்கியமாக இரண்டு வகையான பாக்டீரியாக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளார்கள். கிராம் நெகட்டிவ் ராட்ஸ் மற்றும் பாசிலஸ் இன்று இரண்டு வகையான பாக்டீரியாக்களை அதில் கண்டறிந்துள்ளார்கள்.
மேலும் கிட்டத்தட்ட நமது சமையலறையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிக கிருமிகள் அந்த தண்ணீர் பாட்டிலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு எனவும், நமது வீட்டில் வளரும் செல்ல பிராணிகள் உணவு உண்ண பயன்படுத்தும் பாத்திரங்களில் உள்ளதை விட 14 மடங்கு அதிக அளவிலான பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் ஆய்வு தெரியவந்துள்ளது.
என்ன விதமான பாதிப்புகள் உண்டாகும்?
பாக்டீரியாக்கள் அனைத்துமே நமக்கு தீங்கு விளைவிப்பவை அல்ல. நமது வாயிலேயே கூட பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. எனவே நாம் உண்ணும் உணவுகளிலும் பாத்திரங்களிலும் நுண்ணுயிரிகள் இருப்பது அதிர்ச்சிகரமான விஷயம் இல்லை. அதேசமயம் அவ்வாறு தண்ணீர் பாட்டில்களில் நிறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் ஏற்கனவே நமது வாயில் உள்ள பாக்டீரியாக்களை ஒத்ததாகவே இருக்கும். இதன் காரணமாக தண்ணீர் பாட்டில்களில் இருக்கும் பாக்டீரியாக்களை பற்றி நாம் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை.
தண்ணீர் பாட்டில்களை விட பாதுகாப்பற்ற திறந்த நிலையில் இருக்கும் குழாய்களில் கூட பலர் நீர் அருந்துகின்றனர். தண்ணீர் பாட்டில்களை விட குழாய்களில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால் இதுவரை குழாய்களில் வரும் நீரை குடித்ததால் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக எந்தவித தரவுகளும் இல்லை. அது போலவே பெரும்பாலும் இதுவரை தண்ணீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீரை குடிப்பதால் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக அதிக அளவிலான தரவுகள் ஏதும் தற்போது வரை கிடைக்கவில்லை.
ஒருவேளை அவ்வாறு தண்ணீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள நீரை குடிப்பதற்கு பயமாக இருக்கும் பட்சத்தில் நாம் உறிந்து குடிக்கும் வகையிலான குறுகிய வாய் பகுதிகளை உடைய பாட்டில்களை பயன்படுத்தலாம். இவற்றில் பாக்டீரியாக்கள் இருக்கும் அபாயம் குறைவானதாக இருக்கும்.
மேலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சூடான சோப்பு நீரை பயன்படுத்தி கழுவ வேண்டும். மேலும் வாரத்திற்கு ஒருமுறையாவது பாட்டில்களில் நன்றாக கழுவி சூரிய ஒளியில் படுமாறு வைப்பது நல்லது.