பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்டுவதுடன், தூய்மையும் உறுதி செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சி முலம் நாட்டு மக்களுக்கு உரையாடி வருகிறார். அந்தவகையில் இன்று 98-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உங்கள் மனதின் ஆற்றலை நீங்கள் அறிவீர்கள். அதேபோல் சமூகத்தின் சக்தியுடன் நாட்டின் சக்தி எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பார்த்தோம். புரிந்து கொண்டோம், அனுபவித்தோம். சர்தார்பட்டேலின் பிறந்தநாளான ஒற்றுமை நாள் அன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் தேச பக்தி பாடல்கள், தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகிய போட்டிகளை பற்றி பேசினோம்.
இதில் நாடு முழுவதிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர் ஆர்வத்துடன் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அனுப்பப்பட்டன. கால அவகாசம் காரணமாக விருதுபெற்ற அனைவரையும் பற்றி இங்கு பேச முடியாமல் போகலாம். ஆனால் அவர்களை பற்றி கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வதில் பல்வேறு செயலிகள் பெரும் பங்குவகிக்கின்றன. அது போன்ற ஒரு செயலி இ-சஞ்சீவனி. சுகாதாரத்துறையின் இ-சஞ்சீவனி திட்டம், டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் செயலியாக இ-சஞ்சீவனி மாறி உள்ளது.
மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பொதுமக்கள் (பை…பை) சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொரு வரும் உணறும் காலம் வரும். ஒரு நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் ஒருவகை பறவை, ஒரு உயிரினம் காப்பாற்றப்பட்டது. அது உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இப்படி பல பாரம்பரியங்கள் நம் நாட்டில் மறைந்து மக்கள் மனதில் இருந்தும், இதயங்களில் இருந்தும் அழிந்து போயிருந்த போதிலும் இப்போது மக்கள் பங்கேற்ற சக்தியுடன் அவற்றை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹோலி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதை உள்ளூருக்கான குரல் என்று உறுதியுடன் நாம் விழாவை கொண்டாட வேண்டும்.” என்று கூறினார்.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.