முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா..

by Editor News

தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் பார்க்கப்படுகிறது. தமிழ்க்கடவுள் என்று அனைவராலும் கொண்டாடப்படும் முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகும். இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளே முருகனுக்கு எடுக்கப்படும் தைப்பூச விழாவாகும்.

இந்த தைப்பூச விழாவிற்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுவதுண்டு. முருகப்பெருமான் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. ஆகையால் இந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.

அதேபோல, பழனி மலையில் முருகன் ஆண்டியாக அமர்ந்திருக்கும் போது, சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளிய நாள் தைப்பூசம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார்.

அறுபடைவீடுகளில் குடிகொண்டிருக்கும் முருகனுக்கு தைப்பூச நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அதிலும் பழனி மலையில் தைப்பூசத் திருவிழா, மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பழனியில் தேரோட்டம் நடைபெற்றது. இன்று நாடு மூழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா களைகட்டியுள்ளது. காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், நடைபாதையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment