பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி கடந்த 4 நாட்களில் 10 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை நேற்று முடிந்த நிலையில், இன்று முதல் சிலர் சென்னை திரும்பி வருகின்றனர். இந்நிலையில், வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இருந்து கூடுதலாக இன்று முதல் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கும்பகோணம், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, பெங்களூர் உள்பட பல நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், இன்று கூடுதலாக 1,187 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3, 287 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று மாலையில் இருந்து இரவு வரை சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன.
இதேபோல சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கும் 1,525 சிறப்பு பஸ்கள் செல்கின்றன. இதுவரை வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும், பிற நகரங்களுக்கும் இதுவரையில் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். நாளை 17-ந்தேதி வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 1,941 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதன்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவதால் நாளை இரவுக்குள் வெளியூர் சென்றவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.