தமிழகத்தின் பொருளாதார சரிவை இரண்டு ஆண்டுகளில் சரி செய்து இருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழியக்கம் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சமூகநீதியின் அடிப்படையில் கல்வி, பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு தற்போது பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நல குறைவால் அரசை வழி நடத்த முடியவில்லை. இதன் காரணமாக பொருளாதாரம் சரிவடைந்தது. கடந்த 6-7 ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார சரிவை இரண்டு ஆண்டுகளில் சரி செய்து வருகிறோம். நல்ல திட்டங்களுக்கு நிதி ஒரு தடையாக இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளோம்.
பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த பொழுது 3 சதவிகித நிதி வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்பட்டது. பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில் ஒரு சதவிகித நிதி செலவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி தற்போது தடையாக இல்லை. திறன் சரிந்து இருக்கிறது. அதனால் ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவு செய்ய முடியுமா? என்ற சூழல் உள்ளது நிதியை அதிகரிக்க, உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வரும் காலங்களில் மிக வேகமாக செயல்படும்” எனக் கூறினார்.