2023 ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா ஒடிசா மாநிலம் கட்டக்கில் நேற்று கோலாகமாக நடைபெற்றது. மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், கே பாப் இசைக்குழுவின் பிளாக்ஸ்வான், நடிகர் ரன்வீர் சிங், நடிகை திஷா பட்டானி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த தொடரை சிறப்பாக நடத்த வாய்ப்பளித்த இந்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது தொடக்க விழா உரையில் கூறினார். பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “2023 உலகக் கோப்பை ஹாக்கி ஒடிசாவில் தொடங்கும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்துகள். இந்த தொடர் விளையாட்டு வீரர்களிடையே சகோதரத்துவத்தை மேம்படுத்தி, ஹாக்கியை மேலும் பிரபலப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியா இந்த தொடரை நடத்துவதில் பெருமை கொள்கிறது” என்றார்.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நாளை(ஜனவரி 13) தொடங்கி ஜனவரி 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 16 அணிகளும் குழுவுக்கு 4 அணிகள் என்ற வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. போட்டியை நடத்தும் இந்தியா டி பிரிவில் உள்ளது.
இங்கிலாந்து, ஸ்பெயின்,வேல்ஸ் ஆகிய அணிகளும் இந்தியாவுடன் டி பிரிவில் உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை நடைபெறுகிறது. உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியானது புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் ஜனவரி 29ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்பு 2018-ல் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி தொடரையும் ஒடிசா நடத்தியது. கடந்த உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா அணி காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.