சென்னையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு நடக்கும் ..!

by Editor News

பொங்கலுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு சென்னையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கலையொட்டி நடைபெறும் தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. பொதுவாக மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டபோது வரலாற்று நிகழ்வாக சென்னை மெரினாவில் ஏராளமான மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படியான சென்னையில் தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் தா.மொ. அன்பரசன் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையை அடுத்த படப்பையில் கர்சங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை மார்ச் மாதம் 5ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நடத்த உள்ளது. இந்த போட்டியில் 501 காளைகள் இடம்பெற உள்ளன. போட்டியில் முதல் இடம் பெறும் காளைக்கு ஒரு காரும், மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிகளை காண 10 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்றார்போல ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment