சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 312 உயர்ந்து ஒரு சவரன் 42 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் சற்று அதிகம் என்றே சொல்லப்படுகிறது. அதிலும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் அதிகமாக இருக்கும். அதேநேரம் சிலர் தங்கத்தில் முதலீடு செய்வதை சிறந்த சேமிப்பாகவும் கருதுகின்றனர். ஆனால், அண்மைக்காலமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.312 உயர்ந்து , ஒரு சவரன் ரூ. 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,260க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சவரனுக்கு ரூ. 312 உயர்ந்து ஒரு சவரன், ரூ.42,080க்கு விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.