மார்கழி மாதம்: திருப்பாவை-25, திருப்பள்ளியெழுச்சி பாடல் -05

by Editor News

ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.

திருப்பாவை பாடல் – 25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர

தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இதனை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் கொண்ட பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… திருப்பள்ளியெழுச்சி என்பது, ‘சுப்ரபாதம்’ என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் : 05

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை

சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!

சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பொருள்:

குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. இவ்வாறு புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.

Related Posts

Leave a Comment