மார்கழி மாதம் என்பது ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அதிலும் வளர்பிறை பிரதோஷமும் அன்றைய தினம் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிப்பாடு செய்வதும் சிறப்பு. அதனால் பலவிதமான நன்மைகள் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.
பிரதோஷ காலம் :
சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு. உலகை காத்த காலம் பிரதோஷ காலமாகும். அப்படியான கால கட்டத்தில் நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும். நல்ல மக்கட்பேறு உண்டாகும். இந்தப் பிரதோஷ காலம் என்பது திரயோதசித் திதியில் மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலம் ஆகும்.
சோமசூத்திர பிரதட்சணம் :
இந்தக் காலத்தில் ஈசனின் சந்நிதியை “சோமசூத்திர பிரதட்சணம்” செய்வது என்பது மிகவும் விசேஷம். சோமசூத்திர பிரதட்சணம் என்பது, நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வர வேண்டும்.
பிறகு நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வர வேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். இதற்கு சோமசூத்திர பிரதட்சணம் என்று பெயர்.
இதனை பிரதோஷ காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும். அப்படியாகச் செய்வது மிகவும் விசேஷம். பொதுவாகவே, பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அதுவே விதி. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு ‘ஆத்ம பிரதட்சணம்’ செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இப்படியாகப் பிரதோச காலங்களில் கோயில் சுற்றுகையில் முதலில் சண்டிகேஸ்வரர் வரை, பிறகு தீர்த்த தொட்டி வரை என மாறி, மாறி சுற்றுவதன் மூலம் பிறவா வரம் கிடைக்கப்பெறும். மோக்ஷம் சித்திக்கும். வாழிவில் நலம் பெறுவோம்.