தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளதால் சருமம் வறட்சியாக காணப்படும். குறிப்பாக உதடுகள் வறண்டு தோல் உரியும் நிலை ஏற்படும். இதற்கு உறைபனியான வானிலை மற்றும் குளிர்ந்த காற்று போன்றவை காரணமாக இருக்கிறது.
இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், நாளடைவில் தோல் அதிகமாக உரிந்து ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படும். எனவே குளிர்காலம் முழுவதும் உங்கள் உதடுகளை ஈரப்பதமாக, ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய டிப்ஸ்கள் குறித்து இங்கு காண்போம்.
1. அடிக்கடி எச்சில் வைக்க வேண்டாம் :
குளிர்காலத்தில் உதடுகள் எளிதில் உலர்ந்து போவதால் நாம் அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பது அனைவரும் செய்யும் ஒரு இயல்பான விஷயமாகும். உதடுகளில் அதிகப்படியாக உமிழ்நீரை வைப்பதால் நாளடைவில் இதனால் பாதிப்புகள் ஏற்படும். எனவே இவற்றை முடிந்தவரை தவிர்த்து விடுவது நல்லது.
2. தரமான லிப் பாம் பயன்படுத்தவும் :
உங்கள் உதடுகளில் வறட்சி நீங்க லிப் பாம் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். தினமும் இரவு தூங்கும் முன்னர் லிப் பாமை உதட்டில் தடவி கொண்டு தூங்கலாம். நீங்கள் தூங்கும்போது உங்கள் உதடுகள் ஆழமான ஈரப்பதத்தை பெறுகின்றன. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் லிப் பாம்பாரபென் மற்றும் ஆல்கஹால் இல்லாததாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே தரமானதை வாங்கி பயன்படுத்துங்கள்.
3. நீரேற்றமாக வைத்திருங்கள்:
உடலில் போதுமான அளவு நீரேற்றம் இருந்தால் உதடுகளும் பொலிவாக இருக்கும். குளிர்காலத்தில் நமக்கு தாகம் அதிகமாக இருக்காது, ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
5. எக்ஸ்ஃபோலியேட் :
குளிர்காலத்தில் உதடுகளில் இருந்து தோல் உரிந்து அசிங்கமாக இருக்கும். இதற்கு எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்ல பலனை தரும். வறண்ட மற்றும் வெடிப்புள்ள உதடுகளுக்கு தேன் மற்றும் சர்க்கரை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை என்பதால் உதடுகளின் இயற்கை அழகை மீட்டெடுக்க உதவுகிறது. இதற்கு தேன் மற்றும் சர்க்கரையை 1:2 என்ற விகிதத்தில் கலந்து உங்கள் உதடுகளில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மெதுவாக தேய்க்கவும், பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இயற்கை சிகிச்சை முறைகள் :
உங்கள் முகத்தை போலவே, உங்கள் உதடுகளுக்கும் கூடுதல் கவனிப்பு தேவை. எனவே இந்த சில எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.
எலுமிச்சை மற்றும் பாதாம் எண்ணெய் : எலுமிச்சை சாறு மற்றும் பாதாம் எண்ணெய் எடுத்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உதட்டில் தடவி உலர்ந்த பின்னர் கழுவ வேண்டும். இது உங்கள் உதடுகளுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.
பால் பொருட்கள் : பால் பொருட்கள் உதடுகளுக்கு இயற்கையான பொலிவை வழங்கவல்லது. பால் ஆடை, பசு நெய், வெண்ணெய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உதடுகளில் தடவி வந்தால் உதடு வறட்சி, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
சீரான உணவு : சரியான அளவு தண்ணீர் அருந்துவது, சிறந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சீரான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். வெள்ளரிக்காய் , எலுமிச்சை , தர்பூசணி , கேரட் , காளிப்ளவர் , பிராக்கோலி , கீரைகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். மேலும் தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவி வர விரைவில் உதடு வெடிப்பு நீங்கும். ஆரோக்கியமாக இருந்தாலே நமது உதடுகள் மட்டும் அல்ல சருமமும் பொலிவாகும்.