இன்றுடன் 2022ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்தாண்டில் விளையாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து ஜனவரி 15ம் தேதி இந்திய டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஜனவரி 29ம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஜனவரி 30ம் தேதி நடைபெற்ற ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதி போட்டியில் ரபேல் நடால் மற்றும் ரஷ்யாவின் மெத்வதேவ் மோதினர்.இதில் மெத்வதேவ் வீழ்த்தி 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவ்வை வீழ்த்தி 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார் ரபேல் நடால்.
பிப்ரவரி 5ம் தேதி மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற 14வது 19-வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்திய அணி. பிப்ரவரி 13ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷானை மும்பை அணி பதினாறே கால் கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8வது சுற்றில் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா நடப்பு உலக சாம்பியனும் உலகின் நம்பர் ஓன் வீரருமான மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அபார வெற்றி பெற்று மாக்னஸ் கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்தார். பெங்களூருவில் நடைபெற்ற 8வது ப்ரோ கபடி இறுதி போட்டியில் தபாங் டெல்லி அணி 37-36 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.உக்ரைன் மீது போர் தொடுத்ததால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா மீது பிபா தடை விதித்தது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மார்ச் 04ம் தேதி தாய்லாந்தில் உள்ள தனது வில்லாவில் இருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராட் மார்ஷ் (74) மார்ச் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி தனது 25-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.